கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு பொங்கல் பரிசு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பொருட்களை வால்பாறையில் இறக்கி வைத்துவிட்டு பொள்ளாச்சி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வால்பாறை மலைப்பகுதியில் குரங்கு நீர்வீழ்ச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் ரமேஷ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். மேலும் லாரி கவிழ்ந்ததால் மலைப்பாதையில் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.