ராமநாதபுரம் மாவட்டத்தில் மையப்பகுதியில் மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அமைந்துள்ளது. இங்கு விளைவிக்கப்படும் மிளகாய் மற்றும் பருத்தி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எமனேஸ்வரம் பகுதியில் தயாரிக்கப்படும் பருத்தி மற்றும் பட்டு சேலைகளுக்கு வெளிமாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. நைனார் கோவிலில் உள்ள நாகநாதர் ஆலயம் மிகப் புகழ்பெற்றவை ஆகும். பரமக்குடியில் அதிமுக 7 முறையும், அக்கட்சி இரண்டாகப் பிரிந்தபோது ஜெயலலிதா அணி 1 முறையும் வெற்றி பெற்றது.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 3 முறை வென்றுள்ளனர். தமாக மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக வசம் உள்ள பரமக்குடி தொகுதி தற்போதைய எம்எல்ஏ சதன் பிரபாகர். பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,48,517 வாக்காளர்கள் உள்ளனர். பரமக்குடி நகரில் கழிவுநீர் வாய்க்கால்கள் போதுமான அளவுக்கு அமைக்கப்படவில்லை என்பதும், பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என்பதும் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
சாலைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றம் சாட்டும் மக்கள் சாலை ஓரங்களில் மின் விளக்குகள் அமைத்து சமூகவிரோத செயல்களை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இப்பகுதியில் அல்லுக்கூடம் அமைக்க வேண்டும் என்பது நெசவாளர்களின் நீண்டகால கோரிக்கை. இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலையை தடுக்க தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். பருத்தியை பிரித்தெடுக்கும் ஜின்னிங் மில், மிளகாய் அரைப்பதற்கான தொழிற்சாலையும் தொடங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.
வைகை ஆற்று பகுதியில் உள்ள கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். பார்த்திபனுரிலிருந்து கமுதி செல்வதற்கான புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் விருப்பம். சத்திரக்குடியில் பேருந்து நிலையம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பரமக்குடி எமனேஸ்வரம் பகுதிகளை இணைக்கும் வகையில் வைகை ஆற்றில் உள்ள தயிரைப் பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், நீண்ட கால கோரிக்கைகள் அப்படியே தொடரும் நிலையில் தேர்தலுக்காக பரமக்குடி தொகுதி வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்.