குளிர்பான பாட்டில் திருடிய முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள புக்கிட் மேரா நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெஸ்விந்தர் சிங் என்ற முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 27- ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெஸ்விந்தர் சிங் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே இருந்த குளிர்பான பெட்டியின் கதவை உடைத்து அதிலிருந்து சுமார் 170 ரூபாய் மதிப்புள்ள 3 குளிர்பான பாட்டில்களை திருடி சென்றுள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஜெஸ்விந்தர் சிங்கை அடையாளம் கண்டனர். பின்னர் அவரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு 2 குளிர்பான பாட்டில்கள் இருந்துள்ளது. அதனை கைப்பற்றியுள்ளனர். மேலும் மற்றொரு குளிர்பானத்தை ஜெஸ்விந்தர் சிங் குடித்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவருக்கு நீதிமன்றம் 6 வாரங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.