விருத்தாச்சலத்தில் ஆசிரியை மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் காட்டுக்கூடலூர் சாலை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் மனைவி 42 வயதான ரேகா. இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கூடத்தின் அருகில் வீடு இருப்பதால் ரேகா தினமும் பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்வார்.
அதேபோல் நேற்று காலை பள்ளிக்கூடத்திற்கு சென்ற ரேகா மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென அப்பகுதியில் பள்ளி சீருடையில் மறைந்து இருந்த 18 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவன் தன் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் நடு சாலையில் ரேகாவின் தலையில் வெட்டி உள்ளான்.
இதனால் வலி தாங்க முடியாமல் ரேகா கத்தி சத்தம் போட்டார். இந்த சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரேகாவை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த மாணவன் தப்பித்து சென்று விட்டான். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்புகாரின் பேரில் விருத்தாச்சலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தபோது ஆசிரியர் ரேகா கூறியது, தன்னைத் தாக்கிய மாணவன் பள்ளி சீருடை மாதிரி நீலநிற கட்டம் போட்ட சட்டை அணிந்து இருந்தான். ஆனால் எங்களது பள்ளியில் படிக்கும் மாணவன் போல தெரியவில்லை. அந்த மாணவனின் வயது 18 லிருந்து 20 குள் இருக்கும் என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.