இந்திய அணியில் டெத் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசியது குறித்து ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்..
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் நான்காவது சூப்பர் 12 ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக பரபரப்பான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூலம், மென் இன் ப்ளூ குரூப் 2 இன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெறுகிறது. முதலில் ஆடிய இந்திய அணி விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேச அணி லிட்டன் தாஸ் அதிரடியால் முதல் 7 ஓவரில் விக்கெட் இழக்காமல் 66 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.
இதன்பின் போட்டி மழை நின்ற பின் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. போட்டி மீண்டும் தொடங்கிய பிறகு, பங்களாதேஷ் களமிறங்கியதும் இந்தியாவுக்கு மீண்டும் விளையாட்டில் ஒரு அதிசயம் தேவைப்பட்டது. அப்போது கே.எல்.ராகுல் நேரடியாக ஸ்டெம்பை அடித்து தாஸை ரன் அவுட் செய்து வெளியேற்றினார். 27 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த லிட்டன் தாஸ் அவுட் ஆனதால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. அதன் பிறகு இந்தியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டே இருந்தது, ஆனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா.
இப்போட்டியில் முகமது ஷமி அல்லது அர்ஷ்தீப் சிங் இருவரில் யாரிடம் பரபரப்பான டெத் ஓவரை கொடுப்பார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். அப்போது ரோஹித் ஷர்மா கடினமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் அர்ஷ்தீப் சிங்கிடம் ஓவரை கொடுக்க அவரோ சிறப்பாக வீசி வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில் ஆட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் கூறியதாவது, ” நான் அமைதியாகவும் பதட்டமாகவும் இருந்தேன். ஒரு குழுவாக நாங்கள் அமைதியாக இருந்து எங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவது முக்கியம். அவரிடம் [அர்ஷ்தீப் ]ஏற்கனவே டெத் ஓவர்களை வீசுவதற்கு தயாராக இருக்கும்படி நாங்கள் கேட்டோம். பும்ரா இல்லாததால், யாராவது நமக்காக அதைச் செய்ய வேண்டும் என்று கூறினோம்.
மேலும் பொறுப்பை ஏற்க வேண்டும், ஒரு இளம்வீரர் வந்து அதைச் (டெத் ஓவர்) செய்வது எளிதல்ல. ஆனால் நாங்கள் அதற்கு அவரை தயார்படுத்தினோம். கடந்த 9 மாதங்களாக அவர் அதை செய்து வருகிறார். ஷமிக்கும் அவருக்கும் இடையே ஒரு தேர்வு இருந்தது. இருவரில் யாரை தேர்வு செய்யலாம் என்றபோது அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்தோம். இதற்கு முன்பு எங்களுக்காக அந்த வேலையை (டெத் ஓவர்) செய்த ஒருவரை நாங்கள் ஆதரித்தோம். என் கருத்துப்படி அவர் எப்போதும் அதையே செய்வார்” என்று கூறினார். இப்போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர் வீசி 38 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.