ஐபிஎல் 15-வது சீசனின் 12-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 169/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் அதிகபட்சமாக தீபக் ஹூடா (51), கே.எல்.ராகுல் (68) ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் (34), ராகுல் திரிபாதி (44) ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், “நாங்கள் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி எங்களை விட்டு போகாத படி பார்த்துக் கொண்டோம். அப்படி தான் இந்த போட்டியிலும் நாங்கள் விளையாடினோம். முதல் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்ததை நேர்மறையான விஷயமாக பார்க்க முடியாது. நாங்கள் அதை நினைத்து தளர்வடைய மாட்டோம். நீண்ட பேட்டிங் வரிசை எங்களிடம் உள்ளது. எனவே நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட போவதில்லை” என்று கூறியுள்ளார்.