நீலகிரி மாவட்டம் ரன்னிமேடு பகுதியில் காட்டு யானைகளை விரட்டி அடிக்க தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் தீவனம் மற்றும் குடிநீர் தேடி காட்டு யானைகள், காட்டெருமைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி வந்துள்ளன. இதை தொடர்ந்து வனப்பகுதியை விட்டு வெளியே வந்துள்ள யானைக்கூட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் ரோட்டை கடந்து அங்கு இருக்கின்ற ரன்னிமேடு தண்டவாளத்தில் முகாமிட்டு அதில் உள்ள குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.
இதனால் ரன்னிமேடு பகுதியைச் சுற்றியுள்ள விதைப் பண்ணை, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் பயத்தில் உள்ளனர். அதனால் காட்டு யானைகளை துரத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் காரணமாக வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அந்த பகுதிகளில் வருகின்ற காட்டு யானைகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, ரன்னிமேடு பகுதியில் நடமாடுகின்ற காட்டு யானைகளை விரட்டி அடிக்க 15 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவது தவிர்த்தல் நல்லது என்று கூறியுள்ளனர்.