சாமியார் ஜீவசமாதி ஆன கட்டிடம் தீ விபத்தில் இடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோப்புப்பட்டியில் இருக்கும் தனியார் மடத்தை சாமியார் காளிதாஸ் பராமரித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் ஜீவசமாதி ஆன பிறகு அவரது உறவினர்களான மருதாம்பாள்(90), அவரது மகள் தனலட்சுமி(60) ஆகியோர் தனியார் மடத்தை பராமரித்து வந்துள்ளனர். நேற்று அதிகாலை மடத்தின் சமையல் கூடத்தில் இருக்கும் குளிர் பதன பெட்டியில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியதால் மருதம்பாளும், தனலட்சுமியும் மடத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் சமையல் கூடத்தில் இருந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் மடத்தின் கட்டிடம் இடிந்து சிமெண்ட் கற்கள் பறந்து மருதம்பாளின் காலில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் மடத்தில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.