லாரி மோதிய விபத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பம் உடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளகோட்டிலிருந்து குலசேகரம் நோக்கி ஜல்லி கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி செல்லன்துருத்தி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் லாரி சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பம் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது. இதனால் மின் கம்பம் உடைந்து விழுந்தது.
இந்த விபத்தில் லாரியில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடைந்து விழுந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.