பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அருணாச்சலம் என்பவருக்கு சைலப்பன்(17) என்ற மகன் உள்ளார். இவர் ஆழ்வார்குறிச்சி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சைலப்பன் மாலையில் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்ற அவர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையில் வைத்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது சைலப்பன் படிக்கும் பள்ளியின் பேருந்து அண்ணா சிலை அருகே திரும்பியபோது எதிர்பாராதவிதமாக அங்கு ஜ்நின்று கொண்டிருந்த சைலப்பன் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மாணவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சைலப்பனை மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சைலப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.