டிராக்டர் மீது ஜீப் பயங்கரமாக மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுறத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் சம்பவத்தன்று ரோசனப்பட்டியை சேர்ந்த நாகராஜ், வண்டியூரை சேர்ந்த வேலு, ராசாத்தி, போதுமணி ஆகியோருடன் டிராக்டரில் செங்கல்களை ஏற்றிக்கொண்டு போடிக்கு சென்றனர். இதனையடுத்து அங்கு செங்கல்களை இறக்கி வைத்துவிட்டு 5 பேர் மீண்டும் ஆண்டிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது முத்தனம்பட்டி விலக்கு அருகே சென்றபோது பின்னால் வந்துகொண்டிருந்த ஜீப் திடீரென டிராக்டர் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் டிராக்டர் நிலைதடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்த நிலையில் டிரைவர் தங்கராஜ் மற்றும் நாகராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வேலு, ராசாத்தி, போதுமணி ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். இதற்கிடையே ஜீப்பில் வந்த நபர்கள் அதிஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.