மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் பிரவீன்(17) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று பிரவீனுக்கு பிறந்தநாள் என்பதால் தனது நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டார். அதன்படி பிரவீன் தனது நண்பர்களான ஆகாஷ்(17), நரசிம்மன்(17) ஆகியோருடன் ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். பின்னர் 3 பேரும் ஹோட்டலுக்கு செல்ல முடிவெடுத்தனர். இதனால் மோட்டார் சைக்கிளில் 3 பேரும் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஒட்டன்சத்திரம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கோவை நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நரசிம்மன், ஆகாஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். ஆனால் பிரவீன் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். இதற்கிடையே மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்து மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் சேதமடைந்ததால் வெளியேறிய பெட்ரோலில் தீ பற்றியது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி பிரவீன் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். பேருந்து எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்த 41 பயணிகளும் கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 2 மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.