Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பன்றிகளை பிடிக்க எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை… நகராட்சி அதிகாரியுடன் வாக்குவாதம்…!!!

பன்றிகளை வளர்ப்பவர்கள் அதை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாகவும், விபத்து ஏற்படுவதாகவும், பொதுமக்கள் அதை பிடிக்க வேண்டுமென்று நகராட்சி நிர்வாகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் பன்றி வளர்ப்பவர்களிடம் அதை பட்டியில் அடைத்து வைத்து வளருங்கள். மீறினால் ரோடு, குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகள்  பிடிக்கப்படும் என்று நகராட்சி சார்பாக எச்சரிக்கை நோட்டீஸ் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நகராட்சி சுகாதார பணியாளர்கள்  மருதூர், கே.கே சாலை, சேவியர் காலனி உட்பட பல பகுதிகளில் பன்றிகளை பிடிக்க சென்றார்கள். அப்போது பன்றியின் உரிமையாளர்கள் தாங்கள் வளர்த்து வருகின்ற பன்றிகளை பிடிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி பணியாளர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தார்கள். மேலும் பன்றிகளை பிடிப்பதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று பன்றி வளர்ப்பவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளனர்.

அப்போது நகராட்சி அதிகாரிகள் அவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்தும், தற்போது பிடிக்கக்கூடாது என்று கூறுவது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று கூறினார்கள். இதனால் கோபமடைந்த பன்றி வளர்ப்பவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி அதிகாரியிடம் கடும் வாக்குவாதம் செய்தார்கள். நகராட்சி அதிகாரிகள் பன்றிகளை பிடித்தாலும்  எச்சரிக்கை செய்தபின் தங்களிடமே மீண்டும் பன்றிகளை ஒப்படைக்க வேண்டும் என்ற வீதி இருக்கின்ற நிலையில், அந்த பன்றிகளை ஒப்படைக்காமல் விற்கிறார்கள் என்று பன்றி வளர்ப்பவர்கள் குற்றம் சொன்னார்கள்.

இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |