பெங்களூரிலிருந்து பாரத்-ஷீலா என்ற தம்பதியினரை ஏற்றிக்கொண்டு கேப்டன் ஜஸ்பால் கேரளா மாநிலம் கொச்சின் நோக்கி ஹெலிகாப்டரை இயக்கியுள்ளார். அப்போது இன்ஜினியர் அங்கித் சிங் என 4 பேருடன் பெங்களூரில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி வழியாக வானில் வந்தபோது அத்தியூர் என்ற இடத்தில் காலை 11-15 மணிக்கு தரை இறங்கியது. முன்னதாக கடம்பூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் வானில் இருந்து தாழ்வான பகுதியில் பறந்து சென்றதை அப்பகுதியினர் வீடியோ எடுத்துள்ளனர்.
இதையடுத்து பெங்களூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கணவன் மனைவியுடன் வந்த ஹெலிகாப்டர் அத்தியூர் என்ற இடத்தில் தரை இறங்கியது. ஹெலிகாப்டர் தரையிறங்கியதை அறிந்த கடம்பூர் மலைப்பகுதி பொதுமக்கள் அதை பார்க்க திரண்டனர். மேலும் சிறுவர்கள், இளைஞர்கள் ஹெலிகாப்டர் முன் நின்று போட்டோ மற்றும் செல்பி எடுத்தனர். பனிமூட்டம் காரணமாக அத்தியூர் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் பனிமூட்டம் விலகியதை அடுத்து சிகிச்சைக்காக வந்த கணவன் மனைவியுடன் தனியார் ஹெலிகாப்டர் கொச்சின் நோக்கி புறப்பட்டது. கடம்பூர் அருகே திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.