தேனியில் பத்திர எழுத்தர் அலுவலகத்தில் ரூபாய் 6 லட்சம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் புறாவழிச் சாலை பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்பவர் ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பத்திரம் எழுதும் அலுவலகம் வைத்திருக்கின்றார். இந்நிலையில் இன்று காலை அலுவலகத்தை திறப்பதற்காக சென்ற பொழுது அலுவலகத்தின் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஆவணங்கள் சிதறி கிடந்தது. அங்குள்ள மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அப்பகுதியில் இருக்கும் பழச்சாறு விற்பனை கடை, ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட ஐந்து கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு திருட முயற்சி நடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பத்திர எழுத்தர் அலுவலகம் மற்றும் திருட்டு முயற்சி நடைபெற்ற கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். தற்பொழுது கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.