Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மையத்தில்…. பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர்… துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. சிதம்பரத்தில் பரபரப்பு…!!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் புவனகிரி சேந்திரக்கிள்ளை மணிக்கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் முனிசாமி. இவருடைய மகன் 28 வயதுடைய பெரியசாமி என்பவர் கடலூர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தற்சமயம் சிதம்பரம் தில்லை நகரில் இருக்கின்ற தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது அவருடன் மஞ்சள்க்குழி பகுதியில் வசித்த தீயணைப்பு வீரர் ராஜ்குமார் என்பவரும் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் வெளியே வந்து பார்த்தபோது அங்கு உட்கார்ந்திருந்த பெரியசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் உடனே சிதம்பரம் நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், கடலூர் மாவட்ட பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பேத்குமார், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர் பார்வையிட்டனர்.

அதில் பெரியசாமி பாதுகாப்புப் பணிக்கு வைத்திருந்த துப்பாக்கியால் தனது கழுத்துப்பகுதியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய கழுத்தில் பாய்ந்த தோட்டா பின்பக்கம் உள்ள சுவற்றின் மீது சீறிப் பாய்ந்து சுவர் சேதமாகி இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பெரியசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கணேசன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது, அடுத்த மாதம் ஜூன் 10-ஆம் தேதி பெரியசாமிக்கு திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அவருக்கு சாலை விபத்து நேர்ந்துள்ளது. இதனால் அவருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் தனது வீடு சிதம்பரம் அருகில் இருப்பதால் பாதுகாப்பு பணிக்கு செல்கிறேன். எனக்கு விடுமுறை தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருக்கும்போது அவர் யாரிடமோ செல்போனில் பேசினார். மேலும் அவர் ஒரு பெண்ணை  காதலித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டால் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என்று கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |