தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் மீதும் தன் ஆட்சியின் மீதும் எந்தவித கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் ஆரம்பத்திலிருந்தே மிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஆட்சி அமைந்து 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த அமைச்சர்கள் மீதான பிடியை ஸ்டாலின் தற்போது இறங்கியுள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அமைச்சர்களின் நடவடிக்கைகள் பொறுப்பு ஏற்றதில் இருந்து செயலாற்றும் விதம் என்பன உள்ளிட்ட உளவுத்துறையின் ரிப்போர்ட், உட்பட பலரிடமும் இருந்து கிடைக்கப்பெற்ற ரிப்போர்ட்டுகள் முதல்வர் ஸ்டாலின் கைகளுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே சென்றமாதம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தோனி கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அமைச்சரவை கூட்டத்திற்கு ஸ்டாலின் சென்றார். அமைச்சரவைக் கூட்டத்தில் கோபத்தோடு பேசினாராம் ஸ்டாலின். அதற்கு முக்கிய காரணம் அமைச்சர்கள் மீதான செயல்பாடுகளில் அவருக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி தான். அமைச்சர்கள் மீது ஸ்டாலினுக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக தான் போக்குவரத்து கழகத்துக்கு அரசு வழக்கறிஞர்களை அத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமித்திருந்த நிலையில், அத்தனை நியமனம் ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார் என்றும் கூறும் அவர்கள், இது போன்று பல்வேறு துறைகளிலும் நடந்து வருகின்றது. அத்தனையும் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி கோட்டை வட்டார தகவல்கள் பேசுகையில், அமைச்சர்கள் செய்யும் ஊழல், பணி நியமனங்களில் முறைகேடுகள், சிபாரிசு உள்ளிட்டவைகள் முதல்வரின் கவனத்துக்கு சென்றுள்ளது. மேலும் அந்தந்த துறை சார்ந்த செயலர்களாக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளும் அமைச்சர்கள் பற்றி ஸ்டாலினிடம் குறை கூறியுள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த ஸ்டாலின் அமைச்சரவை கூட்டத்தில் அதனை காட்டிவிட்டார் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் தமிழக அமைச்சர்கள் யாரும் சிபாரிசு, ஊழல், ஆக்கிரமிப்பு, அதிகார துஷ்பிரயோகம், மோசடிகள் மற்றும் குற்றச் சாட்டுகள் வழக்குகள் என எதற்கும் யாருக்கும் உதவி செய்து ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த கூடாது. அவ்வாறு செய்தால் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு எம்எல்ஏக்கள் தயார் நிலையில் இருப்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டும். இதுதான் கடைசி என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதனால் மாண்புமிகுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறுகிறார்கள்.