பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ஆளூர் வீரநாராயணசேரி பகுதியில் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் அம்பிகா என்பவர் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள கருப்பு கோடு ஐந்து என்ற குழுவின் பெயரில் பண மோசடி செய்ததாகவும், புதிய உறுப்பினர் சேர்க்கையில் பாகுபாடு காட்டுவதாகவும், நகைக்கடன் மற்றும் உரம் வழங்குவதில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் அப்பகுதி பெண்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு குருந்தன்கோடு பாரதிய ஜனதா தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.
இதுகுறித்து கூட்டுறவு இணைப் பதிவாளர் பாலசுப்ரமணியன் மற்றும் இரணியல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படாத பொதுமக்கள் அதிகாரிகளை சிறைப்பிடித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு பாதுகாப்புக்காக ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து பொதுமக்களிடம் 30 நாட்களுக்குள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளும், காவல்துறையினரும் உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.