முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, இளம் வீரர் ரிஷப் பந்த் முதல் 3 இடங்களுக்குள் பேட்டிங் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்தித்தது. இந்திய அணியில் மாற்றம் வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, இளம் வீரர் ரிஷப் பந்த் முதல் 3 இடங்களுக்குள் பேட்டிங் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்த மாற்றம் நடக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார், ஏனெனில் பந்த் ஐபிஎல்லில் சிறந்த சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து ராபின் உத்தப்பா ஸ்போர்ட்ஸ்கீடாவிடம் பேசியதாவது , “என்னைப் பொறுத்தவரை உங்களுக்கு ரிஷப் பண்ட் டாப் ஆர்டரில் தேவை. இன்னும் 2 ஆண்டுகளில் 2024 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. எனவே அங்குள்ள சூழலை மனதில் வைத்து ரிஷப் பண்டை முதல் 3 இடங்களுக்குள் பேட்டிங் ஆட வைக்க வேண்டும் என நான் நினைக்கிறன்.
ஐபிஎல்லில் ரிஷப் பண்ட் டாப் ஆர்டரில் விளையாடியபோது சிறப்பாக செயல்பட்டுள்ளார். அந்தத் திறமையை வளர்த்து, அந்த இடத்தில் மேட்ச் வின்னர் ஆவதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும் என நினைக்கிறன் , ரிஷப் பந்த் ஒன்டவுன் விளையாடுவார் அல்லது தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன்.
“தினேஷ் கார்த்திக் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடாமல் போகலாம், ஆனால் ஃபினிஷர்களுக்கு, அடுத்த உலகக் கோப்பைக்கு நீங்கள் சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா ஆகியோரை பயன்படுத்த முடியும்” என்று ராபின் உத்தப்பா அடுத்த உலகக் கோப்பைக்கான ஃபினிஷர்களையும் பரிந்துரைத்தார்.
இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வெலிங்டனில் இன்று இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. அதேபோல ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் அணிக்கு தலைமை தாங்குகிறார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணி :
ஹர்திக் பாண்டியா (கே), ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கீ மற்றும் து.கே ), சஞ்சு சாம்சன் (விகீ), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.