பண்டிகை காலம் வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொருத்தமட்டில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது சற்று குறைந்து வருகிறது என்றே சொல்லலாம்.. தினமும் 20 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை இருந்து வருகிறது இப்படிப்பட்ட சூழலில் அடுத்தடுத்து தொடர்ந்து பண்டிகை காலம் என்பது வர இருக்கிறது.
இந்த நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நவராத்திரி, தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்.
மேலும் முடிந்தவரை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 தடை உத்தரவு அமல்படுத்தலாம். முடிந்தவரை 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு முதல் தடுப்பூசி செலுத்தி விட்டால், இரண்டாவது தடுப்பூசிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும். கொரோனா தொற்று குறைந்து வரும் போதிலும் தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.