ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை யில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக இந்து என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த மாதம் 23ஆம் தேதி வழக்கம்போல பணியில் இருந்த நிலையில், மருத்துவரின் உத்தரவின் பேரில் அங்கு பிறந்த குழந்தைக்கு ஆக்சிஜனை செலுத்த முயற்சி செய்தார். அப்போது ஆக்சிஜன் புளோ மீட்டரில் கோளாறு ஏற்பட காரணமாக திடீரென ஆக்சிஜன் பீறிட்டு வெளியேறியது.
அதில் செவிலியரின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் செவிலியர் தனது இடது கண் பார்வையை இழந்தார். இந்த விபத்து பற்றி அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் செவிலியர் இந்துவின் ஏழ்மை நிலை மற்றும் அவரது சேவையை கருத்தில் கொண்டு அவரின் சிகிச்சைக்கான தொகையை வழங்கினார். மேலும் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வரும் அவரை பணி நிரந்தரம் செய்யவும் பரிந்துரை செய்துள்ளார்.