உள்ளாட்சித் தேர்தலின் போது இரண்டு கட்சியினர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை பகுதியில் 12 வது பகுதிக்கான வாக்குச்சாவடி மையம் மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் தி.மு.க வுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக லிசி ஜாய் என்பவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மெர்லின் ரூத் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து தூரமாக நின்று இந்த இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் வாக்களிக்க வந்த பொது மக்களிடம் தங்கள் சின்னங்களுக்கு வாக்களிக்குமாறு கூறி பணம் கொடுத்துள்ளனர்.
இதனால் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இரண்டு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அந்த இரண்டு கட்சிகளும் அதை கண்டுகொள்ளாமல் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதால் காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியுள்ளனர். அதன்பின் காயமடைந்த 3 பேரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.