உடுமலை தாலுகாவில் பட்டா மாறுதலுக்காக 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகில் செஞ்சேரிபுத்தூரில் வசித்து வருபவர் வேலுச்சாமி(37). இவர் உடுமலை தாலுகா தொட்டம்பட்டி வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பொள்ளாச்சி அருகில் ஊஞ்சவேலாம்பட்டடியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் தொட்டம்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டியில் ஒரு தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினார்.
இந்த தோட்டத்திற்கு பட்டா பெயர் மாற்றுவது தொடர்பாக ஜெயராமன் தொட்டம்பட்டி வி.ஏ.ஓ வேலுசாமியை சந்தித்துள்ளார். அப்போது இந்த பட்டா மாறுதல் சரிசெய்வதற்கு வி.ஏ.ஓ வேலுச்சாமி 6,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் ஜெயராமன் லஞ்சம் கொடுத்து பட்டா பெயர் மாற்றம் செய்ய விரும்பாததால் உடனே அவர் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயராமனிடம் கொடுத்து அந்த வி.ஏ.ஓ.விடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து அந்த ரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்டு ஜெயராமன் வி.ஏ.ஓ வேலுசாமிக்கு 6,500 ரூபாய் லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு ஒளிந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான காவல்துறையினர் கையும் களவுமாக வேலுச்சாமியை பிடித்து அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.