பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு கூலித் தொழிலாளியிடம் ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகில் மேலகொண்டையூர் கிராமத்தில் வசித்து வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான கோபால். இவர் வயது 32. இவர் தனது தாத்தா நாராயணரெட்டி பெயரில் இருந்த ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்தை தனது தந்தை வாசுதேவன் பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் பத்திர பதிவு அலுவலகத்தில் இருந்து அந்த விண்ணப்பம் வருவாய் துறைக்கு ஆன்லைன் மூலமாக சென்றது. இதை அடுத்து மேலகொண்டையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் சர்வேஸ்வரி(39) என்பவரை சந்தித்து பட்டா மாற்றம் செய்வது குறித்து கோபால் பேசியுள்ளார்.
அப்போது பட்டா மாற்றம் செய்வதற்கு சர்வேஸ்வரி கோபாலிடம் ரூ 5000 லஞ்சம் கேட்டுள்ளார்.மேலும் பணம் கொடுத்தால்தான் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவேன் என்று சர்வேஸ்வரி கோபாலிடம் தெரிவித்தார். இதுகுறித்து கோபால் சர்வேஸ்வரி மீது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
உடனே லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாயை கோபாலிடம் கொடுத்து அதை சர்வேஸ்வரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து கோபால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சர்வேஸ்வரிடம் ரசாயனம் தடவிய ரூபாயை கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அங்கு மறைந்திருந்து அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் கிராம நிர்வாக அலுவலராக மேல கொண்டையூர் பகுதியில் 4 மாதமாக பணியாற்றி வந்துள்ளதும் தெரியவந்தது.