காட்டு யானை தாக்கியதால் விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திகினாரை ஜோரகாடு பகுதியில் விவசாயியான மாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவம்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு 11 மணி அளவில் மாதேவனின் கரும்பு தோட்டத்திற்குள் யானை ஒன்று புகுந்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தோட்டத்திற்குள் அங்கும் இங்கும் ஓடி கரும்பு பயிரை நாசம் செய்த காட்டு யானை திடீரென மாதேவனை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் மாதவனின் உறவினர்கள் உடலை எடுக்கவிடாமல் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கடந்த 2 மாதங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது. இது குறித்து தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் உடனடியாக யானைகளை விரட்ட வருவதில்லை. மேலும் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவது இல்லை. இதனையடுத்து காட்டு யானைகள் நுழைவதை தடுக்கும் பொருட்டு அகழி அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் விவசாயியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக வனத்துறையினர் சார்பில் மாதேவனின் குடும்பத்தினருக்கு 50,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.