கர்ப்பிணியை தாக்கி 6 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் முள்ளுவிளை பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபலட்சுமி என்ற மனைவி உள்ளார். கர்ப்பிணியாக இருக்கும் சுபலட்சுமி பிரசவத்திற்காக காவல்ஸ்தலம் செட்டி தெருவில் இருக்கும் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விஷ்ணு தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் சிலர் சுபலட்சுமி வீட்டிற்கு முன்பு பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்தனர்.
அப்போது பட்டாசு வெடிப்பது இடையூறாக இருப்பதாக சுபலட்சுமி கூறியதால் அவர்கள் கர்ப்பிணியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனை விஷ்ணு கண்டித்ததால் கோபமடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டிற்குள் நுழைந்து சுபலட்சுமி மற்றும் அவரது கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சுபலட்சுமி தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முத்துகிருஷ்ணன், மணிகண்டன், ராகுல், சதீஷ், சீனிவாசன், போஸ் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.