ஓசூரில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே ஏராளமான பட்டாசு கடைகள் இயங்கி வருகின்ற நிலையில் இங்கு வடிவேல் என்பவர் பட்டாசு கடை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக காணப்பட்டது.
பின் இது குறித்து போலீஸாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்ட்டது. பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சியடைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களுடன் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தார்கள். பின் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.