சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் 30 க்கும் மேற்பட்ட அறைகளும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த பயங்கர வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 20 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மூன்று பேர் உயிர் இழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிசாமி தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.