‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இயக்குனரை, தயாரிப்பாளர் டி.சிவா காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவர் இமைக்கா நொடிகள், டிமாண்டி காலனி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதனையடுத்து “கோப்ரா” என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி கே.எஸ். ரவிக்குமார், பத்மப்ரியா ஜானகிராமன், மியா, இர்பான் பதான், கனிகா, ஷாஜி சென், ரோஷன் மேத்யூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர் விக்ரம் 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். தற்போது இப்படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இயக்குனர் அஜய் ஞானமுத்து அவருடைய சமூக வலைத்தளத்தில் நடிகர் விக்ரம் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்து இருந்தார்.
இந்த பதிவில் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்காதது பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு தயாரிப்பாளர் டி.சிவா, போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு, அதை தாங்கிக் கொண்டு படத்தை முடித்துக் கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குனரை வன்மையாக கண்டிக்கிறேன் என்று காட்டமாக பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து பட்ஜெட் அதிகமானதன் காரணம் நான் இல்லை என்பதை எப்போது, எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும். மேலும் புரளிகளை விட, ஆதாரங்கள் தெளிவாக சத்தமாக பேசும் என்று தெரிவித்துள்ளார்.