மாணவிகள் பேருந்தில் படிக்கட்டில் என்று செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக அனைத்து பேருந்துகளிலும் படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இந்த வாசகமானது பொதுமக்கள் படிக்கட்டுகளில் தொங்காமல் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காகவே ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் எந்த விதி முறையையும் பின்பற்றாமல் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்கிறார்கள். அதன் பிறகு பேருந்து நிற்கும்போது ஏறாமல் கிளம்பிய போது ஓடிச் சென்று பேருந்தில் ஏறுவது, ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு பயணம் செய்வது போன்ற ஆபத்தான வேலைகளையே மாணவ-மாணவிகள் செய்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட சில ஊர்களில் பேருந்து சேவைகள் குறைவாக இருப்பதால் வேறு வழியில்லை படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவ மாணவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பேருந்து நிலையத்திலிருந்து மாணவ மாணவிகளின் வசதிக்காக ஒரு டவுன் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் பெரும்பாலும் மாணவிகளே பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவிகள் படிக்கட்டில் தொங்குவதை பார்த்து பொதுமக்களும் போக்குவரத்து காவல்துறையினரும் மாணவிகளை இப்படி பயணம் செய்ய அனுமதிக்கலாமா என்று வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் கூடுதல் பேருந்து இயக்கப்படாதது தான் மாணவிகள் படிக்கட்டில் தொங்குவதற்கு முக்கிய காரணமாகும். எனவே அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.