Categories
தேசிய செய்திகள்

பசு கோமியம், சாணத்தால் கொரோனோ வைரஸை குணப்படுத்தலாம் : பாஜக பெண் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!

அசாம் மாநில பாஜக பெண் எம்எல்ஏ பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றின் மூலம் கொரோனோ வைரஸை குணப்படுத்த முடியும் என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹூபே மாநிலத்தில் உள்ள வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 3 ஆயிரம் பேரின் உயிரைக் காவு வாங்கியுள்ளது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவை தவிர்த்து மற்ற நாடுகளில் கடந்த 24 மணிநேரத்தில் 1500 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனோ வைரஸ்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், அசாம் மாநிலம், ஹஜோ சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிபிரியா பசுவின் சிறுநீர், சாணம் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தி குணப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய அவர், பசு சாணம் மிகுந்த பயனுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அதைப்போல பசுவின் சிறுநீர் தெளித்தால் அந்த பகுதியே சுத்தமாகிறது. அதே முறையில் பசுவின் சாணமும், சிறுநீரையும் கொண்டு கொரோனோ வைரசையும் குணப்படுத்த முடியும் என நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார். கொரோனோ வைரஸ் என்பது காற்றில் பரவும் ஒரு நோய், அதைப் பசுவின் சிறுநீரைத் தெளிப்பதன் மூலம் தடுக்க முடியும். ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் தாங்கள் இருக்கும் இடத்தை பசுவின் சாணத்தை மூலம் சுத்தப்படுத்தினார்கள்.

இதன் மூலம் அந்த இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குக் காற்று சுத்தமாகும். இதை அசாம் மாநில அரசும் பின்பற்றலாம் என கூறியுள்ளார். கொரோனோ வைரசை ஒழிக்க வழி தெரியாமல் உலக நாடுகள் கையை பிசைந்து கொண்டிருக்க, பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தால் இந்த வைரசை குணப்படுத்த முடியும் என அசாம் எம்.எல்.ஏ. கூறியிருப்பது மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Categories

Tech |