திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களை மகிழ்விக்கும் விதமாக இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் விவசாய பொருட்களை தேவஸ்தான நிர்வாகம் பயன்படுத்த தொடங்கியுள்ளது. முன்னதாக ஏழுமலையானுக்கு படைக்கப்படும் நெய்வேத்தியம் நாட்டு மாடுகளில் இருந்து பெறப்படும் பஞ்சகாவிய பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பக்தர்களுக்காக பிரசாதங்கள் இயற்கை முறையில் விளைந்த அரிசி, தானியங்கள், வெல்லம், நெய் உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இவை பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஆரோக்கியமான உணவை பக்தர்களுக்கு வழங்கும் நோக்கமாக நாட்டு மாடுகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளை கொண்டு “சம்பிரதாய யோஜனா” என்ற உணவை பக்தர்களுக்கு தேவஸ்தானம் வழங்கி வருகிறது. மூன்று வேளையும் வழங்கப்படும் இந்த உணவு செப்டம்பர் 2-ஆம் தேதி வரை எட்டு நாட்களுக்கு அளிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.