திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்தில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் கிரிவலம் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிரிவலம் வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கோவில் மற்றும் கிரிவலப் பாதையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த மாதம் பவுர்ணமி முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து இரு சக்கர வாகனம், பேருந்து, கார் என்று மக்கள் வருவார்கள். இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசு பேருந்து போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில் வருகிற 15-ஆம் தேதி கிரிவலம் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை கோயம்பேடு, தாம்பரம், வேலூர், வந்தவாசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செஞ்சி, ஆரணி புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பக்தர்கள் கிரிவலம் சென்று விட்டு வீடு திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.