தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருடந்தோறும் மாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருட மாசி திருவிழாவானது இன்று (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த வருட மாசி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே வழக்கம் போல் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த கோவில், 2000 முதல் 3000 வருடங்கள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி முருகப் பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இதுவாகும்.
இந்த கோவில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” ன்று முன்பு அழைக்கப்பட்டது. அதே போன்று முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர் “செயந்திநாதர்’ என்று அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இந்த பெயரே “செந்தில்நாதர்’ என்று மருவியது. தலமும் “திருஜெயந்திபுரம்” (ஜெயந்தி – வெற்றி) என்று அழைக்கப்பட்டு “திருச்செந்தூர்’ என மருவியது என்று வரலாறு உண்டு என்பது கவனிக்கத்தக்கது.