பகுதிநேர வேலை தருவதாக கூறி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணிடம் 5 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது கொண்ட பெண் ஒருவர் சென்ற இரண்டாம் தேதி அவரின் செல்போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்திருக்கின்றது. அதில் பகுதிநேர வேலை தேடுபவரா? உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு! தினமும் அதிக வருமானம் பெறலாம் என வந்திருந்தது. மேலும் ஒரு இணையதள லிங்க்கும் இருந்தது. அதை அந்தப் பெண் நம்பி தனது விவரங்களை பதிவு செய்து கணக்கை தொடங்கி இருக்கின்றார். அப்பொழுது மர்ம நபர் சில பொருட்களை வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபத்துடன் பணம் பெறலாம் என கூறியதை நம்பி அந்த பெண் 200, 300 ரூபாய் என தொடர்ந்து செலுத்தியிருக்கின்றார். மேலும் பொருட்கள் வாங்க கூடுதலாக செலுத்த வேண்டும் என கூறியதை தொடர்ந்து 3000, 4000 என செலுத்தி இருக்கின்றார்.
இதே போல் அந்த பெண் ஒரு வாரத்தில் மொத்தம் 5 லட்சத்து 48 ஆயிரத்து 359 வரை செலுத்தி இருக்கின்றார். அந்த பெண் மர்ம நபருக்கு தொடர்பு கொண்டு கேட்ட பொழுது சரியாக பதில் அளிக்கவில்லை. இதன் பின்னர் தான் ஏமாந்தது தெரிய வந்ததைதொடர்ந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் பணம் வெவ்வேறு வட மாநிலங்களில் இருக்கும் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு சென்றது தெரிய வந்தது. இதனால் போலீசார் பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.