விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட உதவி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இறந்த ஆட்டை கையில் வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரங்கநாயகலு தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளரான இசக்கி ராஜாவை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால் ஆடு மற்றும் மாடுகள் கோமாரி, அம்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கால்நடைகள் தொடர்ந்து இறப்பதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கால்நடைதுறையினர் இறந்து போன ஆடுகள் குறித்து கிராமம் தோறும் கணக்கீடு செய்ய வேண்டும். அதன் பின் ஆடு ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதோடு, சிறப்பு முகாம்களை அமைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.