ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது என்பது தண்ணீருக்கான நோபல் பரிசு ஆகும். இந்த விருது தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் இந்தியரான ராஜேந்திர சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமப்பட்ட ஆயிரம் கிராமங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். தண்ணீரின் வளத்தை பெருக்க ராஜேந்திர சிங் பின்பற்றும் வழிமுறைகள் மிகவும் எளிமையானது. இவர் கடைபிடிக்கும் வழிமுறைகள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும், மண்வளத்தை மேம்படுத்தவும், நதிகளை அழிவில் இருந்து காப்பாற்றவும் வழிவகுக்கிறது.
இந்நிலையில் விருது தேர்வு குழுவினர் “ராஜேந்திர சிங் நமக்கு ஒரு நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார்” என தெரிவித்துள்ளனர். கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது வழங்கப்படுகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங் ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டப்படிப்பு படித்து முடித்தார். இதனை அடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் பணி நியமனம் பெற்ற ராஜேந்திர சிங் ஏராளமான மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுவதை பார்த்துள்ளார். எனவே நவீன முறையில் பாரம்பரிய நீர் சேகரிப்பு முறைகளை பயன்படுத்தி ஏராளமான தடுப்பணைகள் மற்றும் குளங்களை அமைத்துள்ளார்.
இவர் இந்தியாவின் ஜல் புரூஸ் (தண்ணீர் மனிதன்) என்று அழைக்கப்படுகிறார். ராஜேந்திர சிங் ராமன் மகசேசே விருது, ஜம்னலால் பஜாஜ் விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். ராஜேந்திர சிங் தனது சேவை குறித்து கூறியதாவது, குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பணியை தொடங்கினேன். அந்த பிரச்சனை இப்போது தீர்ந்து விட்டது. இப்போது எங்கள் லட்சியம் மிகவும் உயர்ந்ததாக உள்ளது. இயற்கையை சுரண்டுவதும், மாசுபடுத்துவதும் தற்போது அதிகமாகி விட்டது.
அதனை தடுத்து தண்ணீருக்காக ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கை லட்சியம் என கூறியுள்ளார். இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த நீர்வளத்துறை பொறியாளர் கேத்ரின் பாய்காட் என்பவர் தங்கள் நாட்டின் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை ராஜேந்திர சிங்கின் உதவியுடன் மேற்கொண்டார். பின்னர் ராஜேந்திர சிங்கின் பணிகள் குறித்து விருது குழுவுக்கு கேத்தரின் பாய்காட் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருதுக்கு ராஜேந்திர சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.