நைசாக பேச்சு கொடுத்து மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் களத்தாவூர் பகுதியில் அழகம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் அரண்மனை பகுதிக்கு சென்று காய்கறி மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்ல பேருந்திற்காக காத்துகொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் நைசான பேச்சு கொடுத்துள்ளார். அப்போது மூதாட்டியிடம், நீங்கள் அணிந்துள்ள சங்கிலி நன்றாக உள்ளது என்றும், இதே போன்று எனது மகளுக்கு வாங்க போவதாக கூறிய அந்த நபர் சங்கிலியை பார்த்து விட்டு தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய மூதாட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை கழற்றி அந்த மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து சங்கிலியை பார்ப்பது போல் நடித்து திடீரென இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைப்பதற்குள் மர்மநபர் சென்றுவிட்டார். இதுகுறித்து மூதாட்டி உடனடியாக ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.