நெல்லையில் கல்குவாரி பாறைக்குள் இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் பலியாகியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் அருகே இருக்கும் அடைமிதிப்பான் குளம் பகுதியில் தனியார் கல்குவாரி உள்ள நிலையில் சென்ற 14ம் தேதி கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் செல்வகுமார், ராஜேந்திரன், செல்வம், முருகன், விஜய், முருகன் உள்ளிட்ட 6 பேர் பாறைக்குள் மாட்டிக் கொண்டார்கள்.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் முருகன், விஜய், செல்வம் உள்ளிட்ட 3 பேரையும் நேற்று முன்தினம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த பொழுது செல்வம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வரவழைக்கப்பட்டார்கள். நேற்று காலையில் தமிழக அரசின் வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், கனிமம் மற்றும் சுரங்க இயக்குனர் யுவராஜ், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேசிய பேரிடர் மீட்புப் அவருடன் ஆலோசனை நடத்தி 10:30 மணிக்கு முதற்கட்ட பணியாக 3 வீரர்கள் கயிறு மூலம் கல்குவாரி இறங்கி உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக ஈடுபட்டார்கள்.
அப்பொழுது ஒருவர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உடனே அவரை மீட்கும் பணியில் ஈடுபட்ட பொழுது பாறைகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால் 2 மணி அளவில் பணி நிறுத்தப்பட்டு மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே ஈடுபாட்டில் சிக்கியவர்களின் உறவினர்கள் அங்கு திரண்டு கதறிக் கதறி அழுது அவர்களை மீட்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இதையடுத்து அதிகாரிகள் ஆலோசனை அளித்தபடி சுரங்க நிபுணர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாலை 6 மணியளவில் பணியை தொடங்கினார்கள்.