நெல்லையில் உள்ள தனியார் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 69 லட்சம் மோசடி செய்த மேலாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கியின் கிளை செயல்பட்டு வருகின்றது. இங்கு திருநாவுக்கரசு என்பவர் மேலாளராக இருக்கின்றார். இவரின் உறவினர் செந்தில் ஆறுமுகம் வங்கியில் ஊழியராக பணியாற்றுகின்றார். இந்நிலையில் சென்ற மாத வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த பொழுது சென்ற மூன்று மாதங்களில் அதிகப்படியான நகைகளுக்கு கடன் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து லாக்கரில் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்த பொழுது மோசடியாக போலி நகைகளை வைத்து 69 லட்சம் கடனாக வழங்கப்பட்டது தெரியவந்தது. இதனால் வங்கி மண்டல மேலாளர் சுரேஷ் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் மோசடியில் ஈடுபட்டதாக மேலாளர் திருநாவுக்கரசு, செந்தில் ஆறுமுகம் உள்ளிட்டோரை கைது செய்தார்கள். மேலும் மூன்று ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.