மனிதர்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சல் மற்றும் மாரடைப்பு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு எப்படி அறிவது வாங்க பார்க்கலாம்.
நெஞ்செரிச்சல், மாரடைப்பு… இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி. இரண்டுக்குமான அறிகுறிகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். மாரடைப்பு ஏற்படும்போது, சிலருக்கு ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம். `நெஞ்சுவலி வந்தால், அது மாரடைப்பாக இருக்கும் என அச்சம் கொள்வது, `நெஞ்செரிச்சல்தானே… அது தானாகச் சரியாகிவிடும்’ என்று அலட்சியமாக இருப்பது என இரண்டுமே தவறு’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேலும், `இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்’ என்கிறார்கள். நெஞ்செரிச்சல் ஏற்படுவதால், உயிருக்கு உடனடியாக எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. ஆனால் மாரடைப்பை அலட்சியப்படுத்தினால் உயிரிழக்க நேரிடும். எனவே, மாரடைப்புக்கான அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
வேறுபாடு அறிவது எப்படி
சில நேரங்களில் மாரடைப்பின்போது இடப்பக்க மார்பில் வலி, தோள்பட்டை மற்றும் வயிற்றுக்கு மேல் பகுதியில் வலி ஏற்படலாம். ஓய்வில் இருப்பதைவிட வேலை செய்யும்போது மாரடைப்புக்கான வலி அதிகமாகத் தெரியும். நெஞ்செரிச்சல் பெரும்பாலும் நீண்டநேரம் சாப்பிடாமல் இருந்தாலோ, சாப்பிட்ட பிறகோ வரும்.
இதய பாதிப்பு இருப்பவர்களுக்குக் குளிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்போது மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், `சார்பிட்ரேட்’ (Sorbitrate) என்ற மாத்திரையை நாக்கின் அடியில் வைக்க வேண்டும். வலி நின்றுவிட்டால் அது இதய பாதிப்பு; வலி தொடர்ந்தால் நெஞ்செரிச்சலாக இருக்க வாய்ப்பு உள்ளது.
மரபு வழியாக இதயநோய் உள்ளவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், புகை, மதுப்பழக்கம் உள்ளவர்கள், ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரைநோய் உள்ளவர்கள், ஏற்கெனவே இதயநோயால் பாதிக்கப் பட்டவர்கள் உள்ளிட்டோர் நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக இசிஜி (ECG) பரிசோதனை செய்வது சிறந்தது. இவ்வளவு பாதிப்புகளை உண்டாக்க கூடிய இந்த நோயை புறக்கணிக்காதீர்கள். இதுபோன்ற உடல்நலப் பிரச்சினை அல்லது சந்தேகம் ஏதேனும் இருக்கும்போது மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.