சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதி, விக்ரம் மற்றும் சித்தார்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர். அதன் பிறகு சிறந்த கதாசிரியருக்கான விருது சுந்தர பாண்டியன் படத்திற்கு கதை எழுதிய எஸ்.ஆர் பிரபாகரனுக்கு வழங்கப்பட்டது. அதன்பின் அவர் பேசியதாவது, சிறந்த படத்திற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. சற்று காலதாமதம் ஆனாலும் அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி.
நான் படம் எழுதும்போது விருது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதவில்லை. எதார்த்தமாக படம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எழுதினேன். சசிகுமார் சாரும் கதை எழுதுவதில் சிறந்தவர். அவருடன் சேர்ந்து சுந்தர பாண்டியன் படத்தை தயாரித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. விஜய் சேதுபதி அவர்களுக்கு சிறந்த வில்லன் விருது கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த விஜய் சேதுபதி பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகிறது.
அதற்கான பிள்ளையார் சுழி சுந்தரபாண்டியன். அதாவது சுந்தரபாண்டியன் படத்தில் தான் விஜய் சேதுபதி முதலில் வில்லனாக நடித்தார். நான் ஓடிடி மற்றும் திரையரங்கு இரண்டையும் ஆரோக்கியமான ஒன்றாக தான் பார்க்கிறேன். இளம் இயக்குனர்கள் நல்ல கதையை கொண்டு வந்தால் அவர்களை வைத்து படம் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது. என்னை பல நண்பர்கள் நடிப்பதற்கு அழைத்தாலும் எனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. நான் இயக்குனராக இருந்து கதைகளை எழுதவே விரும்புகிறேன் என்று கூறினார்.