நூதன முறையில் பெண் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டிலிருந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் பாளையம் பாரதி நகரில் வேலப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஓய்வு பெற்ற ஆசிரியரான முத்தம்மாள்(82) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி முத்தம்மாள் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னிடம் இருந்த 2 ரூபாய் நோட்டுகளை கீழே வீசியுள்ளார். இதனை அடுத்து கீழே கிடந்த 100 ரூபாய் நோட்டுகளை முத்தம்மாள் எடுத்து இது உங்களுடையதா? என அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். அதற்கு “ஆம், இது எனது பணம் தான்” என கூறி அந்த பெண் வாங்கிக் கொண்டார். அந்தப் பெண் பேசுவது மூதாட்டிக்கு பிடித்திருந்தது.
மேலும் தனியாக இருப்பதால் அந்த பெண்ணை அடிக்கடி வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த பெண் மூதாட்டியிம் அவரது பெயர், ஊர் குறித்த எந்த விவரத்தையும் கூறவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று முத்தம்மாள் குளித்துக் கொண்டிருந்த போது அந்த பெண் பீரோவில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம், 6 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சில நாட்கள் கழித்து பீரோவை திறந்து பார்த்த முத்தம்மாள் நகை, பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முத்தம்மாள் சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பணம் மற்றும் நகையை திருடி சென்ற பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.