வேலையை குறை கூறிக் கொண்டே இருந்ததால் சக ஊழியர் கத்திரிக்கோலை எடுத்து தையல்காரரை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் ஒன்பதாவது குறுக்கு தெருவை சேர்ந்த சரவணன் என்பவர் ஒரு தையல் கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில் கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் என்பவரும் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் இருவரும் பணியாற்றிக் கொண்டிருந்த போது சரவணன் துணியை சரியாக தைக்கவில்லை என்று கூறி மாதவன் குறை கூறிவந்துள்ளார். தொடர்ந்து அவர் குற்றம் சாட்டி வர அதை பொறுக்காத சரவணன் மாதவனுடன் வாக்குவாதம் செய்தார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போக ஆத்திரமடைந்த மாதவன் அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து சரவணனை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோடம்பாக்கம் போலீசார் சரவணனை குத்திய மாதவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.