நீர்வளத்துறை அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையை சேர்ந்த அசோகன் என்பவர் நீர்வளத் துறை அலுவலகத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றார். இவர் அலுவலகத்தில் இருந்த பொழுது காரில் வந்து இறங்கிய மர்ம நபர், நான் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் எனவும் நீங்கள் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்திருக்கின்றது. அதன் பேரில் உங்களை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு அசோகன் நான் யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை எனக் கூறியுள்ளார்.
இருப்பினும் மர்ம நபர்கள் அசோகனின் அறையில் சோதனை மேற்கொண்டுள்ளார்கள். பின் வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளார்கள். இதன் பின்னர் மீண்டும் அவரை காரில் அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் அசோகனின் மனைவிக்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் என கூறி வந்தவர் மீது சந்தேகம் ஏற்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அசோகனின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்கள். இதன் பின்னர் மர்ம நபர்கள் அசோகனை நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் சென்று விசாரணை செய்ததில் வந்தது போலியானவர் என்பதும் தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அசோகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் பறிக்க முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.