விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் சீனி ராஜா-பாரதி தம்பதியினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது சீனி ராஜா தன்னுடைய மகளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று கூறிய போது அவருடைய மனைவி அவருக்கு ஏபிசிடி கூட படிக்க தெரியாது என கூறினார். இதனால் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் நிகழ்ச்சியின் பாதியிலேயே சீனி ராஜாவை வின்னராக அறிவித்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் ஃபேமஸான நிலையில் தற்போது சீனி ராஜா மற்றும் பாரதி தம்பதியினர் சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். அப்போது சீனி ராஜா கூறியதாவது, எனக்கு சிறிய வயது முதல் படிப்பு சரியாக வரவில்லை.
இதனால் நான் ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது வேலைப்பளு காரணமாக சரியாக சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் இருந்ததால் சிறுநீரகம் சுருங்கி போய் விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். கடந்த ஒரு வருடமாக அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறேன். அதன்பின் என்னால் இயன்ற வரைக்கும் நான் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் என்னுடைய மனைவி வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.
அவர் என்னைவிட அதிகமாக சம்பாதிப்பது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்றார். இதனையடுத்து பாரதி பேசியதாவது, நான் என்னுடைய கணவரை வீட்டில் எப்போதுமே கிண்டல் செய்து கொண்டுதான் இருப்பேன். அப்படிதான் நிகழ்ச்சியிலும் நான் பேசினேன். அது அனைவராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் ஏபிசிடி கூட படிக்க தெரியாது என்று கூறியதை கட் செய்து விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யும் அளவுக்கு மாறிவிட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் என்னுடைய கணவர் மீது எனக்கு மரியாதை அதிகரித்துவிட்டது என்றார்.