நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்திருந்த புகைப்படம் பற்றியும், உச்சநீதிமன்றத்தின் முந்தைய நாள் தலைமை நீதிபதிகள் பற்றியும் பிரபல மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார். அதனால் அவர் நீதிமன்றத்தை அவமதிக்க கூடிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி உச்சநீதிமன்றம் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது. சென்ற மாதம் 22ஆம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு பற்றி பிரசாந்த் பூஷணும் ட்விட்டர் நிறுவனமும் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் பின்னர் நடந்த விசாரணையில் தனது கருத்தை கூறிய பிரசாந்த் பூஷண், ” மோட்டார் சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை சரியாக கவனிக்காமல் அப்படி ஒரு கருத்தை கூறி விட்டேன். நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிளில் அமர்வதற்கு தலைக்கவசம் தேவையில்லை என்பதை உணர்கிறேன். அதனால் எனது கருத்தில் இடம்பெற்ற அந்த ஒரு பகுதிக்கு மட்டும் நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் என்னுடைய மற்ற கருத்துகளில் எந்த வருத்தமும் கிடையாது” என்று அவர் கூறியுள்ளார். அவருடைய தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் நீதிமன்றத்தை எந்த வகையிலும் அவர் அவமதிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் கடந்த 5ஆம் தேதியன்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ணமுராரி ஆகியோர் காணொலிக் காட்சி மூலமாக நேற்று இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கினர். அந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் தனது குற்றத்தை உணர்ந்துள்ளதாக கூறினர். மேலும் அவருக்கு விதிக்கப்படக் கூடிய தண்டனை பற்றி வருகின்ற 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.