நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
சென்னை மாநகராட்சியில் உள்ள மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யம்பெருமாள் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 160 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும், டெண்டர் முடிவடைந்த உடன் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நீதிபதிகள் 2020-ம் ஆண்டிற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். ஆனால் இதுவரை பணிகள் முடிவடையாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகள் ஆஜராகி திட்டத்தை நிறைவேற்றாததற்கு மன்னிப்பு கேட்டனர். அதற்கு நீதிபதிகள் அவமதிப்பு வழக்கில் ஆஜராகி இருந்த 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் உங்களை வரவழைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை என்றும், இதுபோன்ற குற்றங்கள் இனி நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் கூறினர். மேலும் புதிய திட்டம் உருவான பிறகு பணிகளை 3 வருடத்திற்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டதால் நீதிபதிகள் அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.