டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மதுக்கரை நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.
கோவையை சேர்ந்த 22 வயதான டிடிஎப் வாசன் என்ற இளைஞர் இரு சக்கர வாகனங்களை இயக்கி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து twin throttlers என்ற அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் அதிவேகமாக வாகனத்தை இயக்குவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து என்ற நபரை தனது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்து கோவையில் முக்கிய சாலையான திருச்சி – பாலக்காடு மெயின் ரோடு பைபாஸ் சாலையில் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை இயக்கி அதனை தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்..
முன்னதாகவே அவருக்கு கோவை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் மன்னிப்பு கோரி வீடியோவையும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி மீண்டும் இது போன்ற ஒரு சர்ச்சையில் அவர் சிக்கிய நிலையில், கோவை போத்தனூர் காவல் நிலையம், சூலூர் காவல் நிலையம் என இரு இடங்களிலும் வழக்கானது பதிவு செய்யப்பட்டிருந்தது..
அதன்படி மோட்டார் வாகன சட்டம் ஐபிசி 279 உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதிவேகமாக வாகனத்தை இயக்கியது மற்றும் உயிருக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று மதுக்கரை தாலுகா நீதிமன்றத்தில் காலை 10:30 மணி அளவில் சரணடைந்துள்ளார். அவர் நாளை (இன்று) வரை அமர வைக்கப்பட்டு பின்னர் அவர் இரண்டு உத்திரவாதம் பெறப்பட்ட பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்..