ஆயுள் தண்டனை விதித்த நீதிபதியின் அறைக்குள் குற்றவாளி காலணியை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றவாளியான 27 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து விரக்தியில் இருந்த குற்றவாளி நீதிபதி மீது காலணியை கழற்றி வீசினார். இருப்பினும் அந்த காலனி அவர் மீது படாமல் சாட்சியங்கள் விசாரிக்கும் கூண்டில் சென்று விழுந்தது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கை பொறுத்த வரையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 27 வயது குற்றவாளியின் பெயர் சுஜித். சூரத் நகரில் தங்கி வேலை பார்த்து வரும் இவர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று தொழிலாளியின் 5 வயது மகளை சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை கொலை செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சுஜித் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று சுஜித்துக்கு நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.